வியாழன், 13 அக்டோபர், 2011

மரணம் சுவாசித்தோர் மகிமை சொல்லுவோம்..!!

யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வேண்டுகோள்: யாழ்ப்பாண முஸ்லிம் சமூகமானது இழப்புகள் பல சந்தித்த ஒரு சமூகம். குறிப்பாக தமிழர் விடுதலைக்காக எப்போது தமிழ் ஆயுத அமைப்புக்கள் ஆயுதம் ஏந்தினவோ அன்றிலிருந்து யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும் நெருக்குவாரங்கள் ஏற்படத்தொடங்கியது.
தமிழ் இயக்கங்கள், இந்திய இராணுவம், அரசாங்கப் படைகள் மற்றும் புலிகள் என அத்தனை தரப்பாருமே யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கெதிரான அநியாயங்களை அரங்கேற்றியுள்ளனர்.
யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கெதிரான இந்த அநியாயங்கள் மூலம் நமது சமூகம் பெறுமதிமிக்க பல உயிர்களை பல்வேறு காலகட்டங்களில் இழந்துள்ளது. இதில் ஜலீல் மாஸ்டர், வெள்ளை, ஜெலீஸ் என இன்னும் பலர் அடங்குவர். விமானத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு, காணாமல் போனமை, புலிகளின் தண்டனை, புலிககளின் மூளைச்சலவைக்கு உட்பட்டு மரணத்தை தழுவியமை என பல்வேறு வகையாகவும் இந்த மரணங்களை வகுக்கலாம்.
இந்த மரணங்களையும், இதில் மரணமடைந்தவர்களை எப்போதும் எம் நினைவில் வைத்திருப்பது நிகழ்கால யாழ்ப்பாண சமூகத்தினதும், ஒவ்வொரு தனிநபரினதும் பிரதான கடமையாகிறது.
அந்தவகையில் வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்குள்ளான இந்த ஒக்டோபர் மாதத்தில் அக்கிரமங்கள் மூலமாக மரணத்தை சுவாசித்த யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளை நினைவுகூற யாழ் முஸ்லிம் வலைத்தளம் தீர்மானித்துள்ளது.
உங்களிடத்தில் அவ்வாறு மரணத்தை சுவாசித்த யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளின் புகைப்படங்கள், அவர்களுடனான அனுபவங்கள், அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் மற்றும் திறமைகள் இருப்பின் சமூக நலன்கருதி தயவுசெய்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மரணத்தை சுமந்த அந்த உறவுகளின் மகிமையை இந்த உலகிற்கு அறியச்செய்யவும், அவர்களின் தியாகங்களை யாழ்ப்பாண இளம் சந்ததியினர் அறிந்துகொள்ளவும் நிச்சயம் எமது முயற்சி உதவும்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இணையத்தள வசதியற்ற, உற்ற உறவுகளை இழந்த, முதியவர்கள் மற்றும் அத்தனை பேருக்கும் இந்த தகவலை கொண்டுசெல்லுங்கள்.
அல்லாஹ் எமது நேர்மையான நோக்கத்தை ஏற்றுக்கொள்ளட்டும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக